செய்திகள்

மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் 7-ந் தேதி அமெரிக்கா பயணம்

Published On 2018-07-04 23:19 GMT   |   Update On 2018-07-04 23:19 GMT
மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் வருகிற 7-ந் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெறுகிறார்.
சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அவ்வப்போது சிங்கப்பூர் சென்று வந்தார். ஆனாலும் அவரது உடல்நிலையில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

வேகமாக நடக்க முடியாமலும், தெளிவாக நீண்ட நேரம் பேசமுடியாமலும் அவதிப்பட்டு வருகிறார். இதனால் தே.மு.தி.க. சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் சில நொடிகள் மட்டுமே பேசிவருகிறார்.

கடந்த மாதம் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கூட அவர் நன்றியுரை மட்டுமே ஆற்றினார். அந்த நிகழ்ச்சியில் அவரது மைத்துனரும், தே.மு.தி.க. துணை செயலாளருமான எல்.கே.சுதீஷ் பேசும்போது, “விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக ஜூலை மாதம் (இம்மாதம்) வெளிநாடு செல்கிறார். செப்டம்பர் மாதம் நடைபெறும் கட்சி ஆண்டுவிழாவில் அவர் ஒரு மணி நேரம் உரையாற்றுவார்”, என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தநிலையில் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக 7-ந் தேதி அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறார். விஜயகாந்துடன், அவரது மனைவி பிரேமலதாவும் செல்கிறார். அமெரிக்காவில் விஜயகாந்துக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

ஒரு மாத காலம் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெறும் விஜயகாந்த், அடுத்த மாதம் (ஆகஸ்டு) தனது பிறந்தநாளான 25-ந் தேதிக்குள் தாயகம் திரும்புவார் என்று தே.மு.தி.க. வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 
Tags:    

Similar News