செய்திகள்

ஆசைத்தம்பி முதல் ஆனந்தன்வரை தமிழகத்தை உலுக்கிய 23 என்கவுண்டர்கள்

Published On 2018-07-04 06:07 GMT   |   Update On 2018-07-04 06:07 GMT
தமிழகத்தில் ரவுடிகளின் அட்டகாசம் தலை தூக்கும் போது போலீசார் என்கவுண்டர் மூலம் அவர்களை முடிவுக்கு கொண்டு வருவது வழக்கம். அதன்படி கடந்த 1998-ம் ஆண்டு முதல் இதுவரை 23 என்கவுண்டர்கள் நடந்து உள்ளன.
சென்னை:

தமிழகத்தில் ரவுடிகளின் அட்டகாசம் தலை தூக்கும் போது போலீசார் என்கவுண்டர் மூலம் அவர்களை முடிவுக்கு கொண்டு வருவது வழக்கம். தற்போது போலீசாரை தாக்கிய ரவுடி ஆனந்தன் தரமணி அருகே சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளான். இது குற்றச்செயலில் ஈடுபடும் ரவுடிகளுக்கு மீண்டும் விடுக்கப்பட்டு உள்ள ஒரு எச்சரிக்கை மணி ஆகும்.

கடந்த 1998-ம் ஆண்டு முதல் இதுவரை 23 என்கவுண்டர்கள் நடந்து உள்ளன. தமிழகத்தை உலுக்கிய அதன் விவரம் வருமாறு:-

1998-ம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரி அருகே நடந்த மோதலின் போது ரவுடி ஆசைத்தம்பியும், அவனது கூட்டாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2002-ம் ஆண்டு தமிழக போலீஸ் படை பெங்களூர் சென்று அங்கு பதுங்கி இருந்த இமாம் அலி உள்ளிட்ட 5 பேரை சுட்டுக் கொன்றது. அப்போது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2003-ல் சென்னையில் வெங்கடேச பண்ணையார், மற்றும் சென்னையை கலக்கிய அயோத்தி குப்பம் வீரமணி ஆகியோர் என் கவுண்டர் செய்யப்பட்டனர்.


2004-ம் ஆண்டு பல ஆண்டுகளாக 3 மாநில அரசுக்கு சிம்ம சொப்பன மாக விளங்கிய சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

2007-ல் சென்னையை கலங்க வைத்த ரவுடி வெள்ளை ரவி வீழ்த்தப்பட்டான். 2010-ம் ஆண்டு நீலாங்கரையில் திண்டுக்கல் பாண்டியும், அவனது கூட்டாளியும் என்கவுண்டர் செய்யப்பட்டனர். அதே ஆண்டில் கோவையில் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த டாக்சி டிரைவர் மோகன கிருஷ்ணன் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டான்.

2012-ம் ஆண்டு சென்னையில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட வட மாநில வாலிபர்கள் 5 பேர் ஒரே நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

அதே ஆண்டு சிவகங்கையில் போலீஸ்காரர் ஒருவர் கொலையில் தொடர்புடைய பிரபு, பாரதி ஆகியோர் என்கவுண்டர் செய்யப்பட்டார்கள்.

2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மதுரையில் ரவுடிகள் இருளாண்டி, சகுனி கார்த்தி ஆகியோர் சுட்டு கொல்லப்பட்டனர். தற்போது சென்னையில் ரவுடி ஆனந்தனை போலீசார் சுட்டு விழ்த்தி உள்ளார்கள்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ரவுடிகள் முழுவதும் ஒடுக்கப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

ஜெயலலிதா ஆட்சியில் 2002-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2003-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 11 ரவுடிகளை போலீசார் சுட்டு வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Encounter #ChennaiEncounter
Tags:    

Similar News