ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் தீ
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் முதலியார் ஊத்துப்பங்களா உள்ளது. அடர்ந்த வனப்பகுதியான இங்கு யானை, சிறுத்தை, காட்டெருமை, புள்ளிமான் மற்றும் அரியவகை வன விலங்குகள் உள்ளன.
இந்த நிலையில் முதலியார் ஊத்துப்பங்களா பகுதியில் அடர்ந்து வளர்ந்திருந்த கோரைப் புற்களில் திடீரென தீப்பிடித்தது.
அந்த நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது.
காட்டுத்தீ வேகமாக பரவியதால் வன விலங்குகள் உயிர் பிழைப்பதற்காக அங்கிருந்து தப்பி ஓடின. தீ விபத்தில் விலை உயர்ந்த காட்டு மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் கருகின.
தீ விபத்து பற்றி அறிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரிகள், வேட்டை தடுப்புக் காவலர்கள் மலைவாழ் மக்கள் மற்றும் தீ தடுப்பு குழுவினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் லேசாக மழை பெய்ய ஆரம்பித்ததால் தீயின் வேகம் கட்டுக்குள் வந்தது. தீ மேலும் பரவாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.