செய்திகள்
குப்பை கிடங்கு தீப்பற்றி எரிவதையும், அதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தையும் படத்தில் காணலாம்.

நெல்லை குப்பை கிடங்கில் தீவிபத்து- கடும் புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி

Published On 2018-07-02 10:07 GMT   |   Update On 2018-07-02 10:07 GMT
நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
நெல்லை:

நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு ராமையன்பட்டியில் உள்ளது. இங்கு சுமார் 30 ஏக்கர் பரப்பளவுக்கும் மேற்பட்ட பகுதியில் குவியல் குவியலாக குப்பைகளை குவித்து வைத்துள்ளனர். பல குப்பை மேடுகள் சுகாதார சீர்கேடுகளை உருவாக்காமல் இருக்க மூடாக்கு பூங்கா உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் அருகில் இயற்கை உரம் தயாரிக்கும் உரக்கிடங்குகளும் உள்ளன.

இங்குள்ள குப்பை மேட்டில் நேற்று இரவு திடீரென்று தீப்பிடித்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால், தீ மளமளவென்று பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் சூழ்ந்தது. சாலையில் வாகனங்கள் செல்ல முடியாதவாறு புகை சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சம்பவ இடத்துக்கு உடனடியாக பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயணைப்பு அதிகாரி பிரதீப் குமார் தலைமையில் சென்று தீயை அணைத்தனர். ஆனால் புகை மூட்டம் காரணமாக அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. மாநகராட்சி ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீயை அணைக்க முடியவில்லை.

கடும் புகை மூட்டத்திற்கு மத்தியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள்.

இன்று 2-வது நாளாக தொடர்ந்து அந்த பகுதியில் தீ எரிந்து வருகிறது. தொடர்ந்து புகை மூட்டமும் வெளியேறுவதால் வானில் மேக குவியலாக நீண்ட தூரம் புகை பரவி உள்ளது. வீடுகளில் குடியிருப்பவர்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டனர். இன்று நெல்லை மாவட்ட தீயணைப்பு துணை அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கப்பட்டு வருகிறது. பேட்டை, பாளை தீயணைப்பு வாகனங்கள் மூலம் தொடர்ந்து இடை விடாமல் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது.

தீ ஓரளவு கட்டுக்குள் வந்தால் தான், மூடாக்கு பூங்கா, இயற்கை உரம் தயாரிக்கும் பகுதிகள் எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். இன்று பிற்பகலிலும் தொடர்ந்து தீ அணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. #Tamilnews
Tags:    

Similar News