செய்திகள்

சர்ச்சைக்குரிய சுவரை இடித்த வழக்கு- மதுரை கலெக்டர் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2018-07-02 09:19 GMT   |   Update On 2018-07-02 09:19 GMT
திருமங்கலம் அருகே உள்ள சந்தையூரில் சர்ச்சைக்குரிய சுவரை இடித்த வழக்கில் மதுரை கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சந்தையூரில் கட்டப்பட்டு இருந்த சுவரால் இரு சமூகத்தினரிடையே பிரச்சனை நிலவியது.

இதையடுத்து சுவரை இடிக்கக்கோரி ஒரு சமூகத்தினர் ஊரை காலி செய்து அருகில் உள்ள மலையில் குடியேறினர். மேலும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். போராட்டம் 2 மாதங்கள் வரை நீடித்தது.

இந்த சுவர் விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சந்தையூருக்கு சென்றனர்.

இதையடுத்து மதுரை மாவட்ட நிர்வாகம் இரு சமூக மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய சுவரின் ஒரு பகுதியை இடிக்க உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


இதை விசாரித்த ஐகோர்ட்டு, சுவரை இடிக்க உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அந்த சுவரை மாவட்ட நிர்வாகம் தீண்டாமை சுவர் என அறிவித்து கடந்த ஜனவரி மாதம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவர் இடிக்கப்பட்டது.

இந்த நிலையில் சந்தையூர் சுவரை தீண்டாமை சுவர் என மாவட்ட நிர்வாகம் அறிவித்ததை எதிர்த்து ஆதி தமிழர் பேரவை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சர்ச்சைக்குரிய சுவர் இருந்த இடம் அரசுக்கு சொந்தமானதுதானா? என்பது தொடர்பாக விளக்கம் அளிக்க வருகிற ஆகஸ்டு இறுதி வாரத்தில் மதுரை கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். #SupremeCourt
Tags:    

Similar News