செய்திகள்

ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்

Published On 2018-06-28 10:19 GMT   |   Update On 2018-06-28 10:19 GMT
சிலைகள் கடத்தல் சம்பந்தமாக நடைபெற்று வரும் விசாரணையில் ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் பழம்பெரும் புகழ் மிக்க, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோயில்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நமது மாநிலத்தில் இருந்து சிலைகள் கடத்தப்பட்டதும், வெளி மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதும், சிலை கடத்தல் சம்பந்தமாக கைது செய்யப்பட்டிருப்பதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிலைகள் கடத்தப்பட்டது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை என்று புகார் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக தமிழக அரசு சிலைகளை பாதுகாக்க பாதுகாப்பு அறைகளை கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை, சிலைகளை மீட்டுக் கொண்டுவந்த அதிகாரியை பணியிட மாற்றம் செய்திருப்பது உட்பட சில குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாக தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்திருக்கிறது. எனவே இந்த குற்றச்சாட்டுகளால் தமிழக அரசு சந்தேகத்திற்கு இடம் கொடுத்திருக்கிறது.

எனவே சிலைகள் கடத்தல் சம்பந்தமாக நடைபெற்று வரும் விசாரணையில் எவ்வித குறுக்கீடும், பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும். குறிப்பாக சிலை கடத்தல் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வரும் குழுவுக்கு தேவைப்படும் உதவிகளை முறையாக, நேர்மையாக செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். அதன் மூலம் விசாரணைக்கு தடங்கல் ஏதும் ஏற்படாமல் விரைந்து விசாரணை நடைபெற வேண்டும்.

எனவே தமிழக அரசு சந்தேகத்திற்கு இடம் கொடுக்காத வகையில் சிலை கடத்தல் சம்பந்தமான வழக்கில், சிலை கடத்தல் தடுப்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News