செய்திகள்

சிலை கடத்தல் கும்பலை காப்பாற்ற அரசு முயற்சி - ராமதாஸ் குற்றச்சாட்டு

Published On 2018-06-28 15:37 IST   |   Update On 2018-06-28 15:37:00 IST
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் விசாரணையை முடக்கி சிலை கடத்தலில் தொடர்புடைய அதிகாரிகளை காப்பற்ற அரசு முயற்சித்து வருவதாக ராமதாஸ் குறறம்சாட்டி உள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாது:-

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது, நேர்நின்ற விசாரணை அதிகாரியான பொன்.மாணிக்கவேல், ‘‘கோவில் சிலைகளை பாதுகாத்து வைப்பதற்காக பாதுகாப்பு அறைகள் கட்ட அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை; சிலைக் கடத்தல் தடுப்புக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் எனக்குத் தெரியாமலும், உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெறாமலும் மாற்றப்படுகிறார்கள். சிலைக் கடத்தல் குறித்த எனது விசாரணைக்கு அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறது’’ என குற்றம்சாட்டினார்.

அதைக் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் அவரது விசாரணைக்கு ஒத்துழைக்கும்படியும் ஆணையிட்டனர்.

தமிழ்நாட்டிலுள்ள கோவில்களுக்கு சொந்தமான விலை மதிப்பற்ற நூற்றுக்கணக்கான ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கு விற்கப்பட்டிருக்கிறது.

தஞ்சாவூர் ராஜராஜன் கோயிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு குஜராத் அடுங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜராஜன், உலகமா தேவி சிலைகளை மீட்க கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பயனளிக்காத நிலையில், அச்சிலைகளை பொன். மாணிக்கவேல் தலைமையிலான குழு அண்மையில் மீட்டு வந்து தஞ்சை பெரிய கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது.


தமிழகத்திலிருந்து உலகின் பல நாடுகளுக்கும் கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மாணிக்கவேல் தலைமையிலான குழு தீவிரப்படுத்தியுள்ள நிலையில் தான் அவரது செயல்பாடுகளுக்கு தமிழக ஆட்சியாளர்கள் முட்டுக்கட்டைப் போடத் தொடங்கியுள்ளனர். இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவை குறித்து தனி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

சிலைகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் தமிழகத்தின் இந்நாள் அமைச்சர்கள் சிலருக்கும், முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் தான், அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக ஆட்சியாளர்கள் விளக்கமளிக்க வேண்டும்.

சிலைக்கடத்தல் குறித்த வழக்குகளில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அதை தமிழக அரசு பாராட்டியிருக்க வேண்டும். சிலைக்கடத்தல் சிறப்பு விசாரணைக் குழுவிற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்திருக்க வேண்டும். மாறாக விசாரணைக்குழுவின் அதிகாரிகளை அதன் தலைவருக்கும், இவ்வழக்கை கண்காணிக்கும் நீதிமன்றத்திற்கும் தெரியாமல் ஆட்சியாளர்கள் மாற்றுகிறார்கள் என்றால், அதற்கான நோக்கம் நிச்சயம் நல்லதாக இருக்க முடியாது என்பது தான் உண்மை.

கடந்த 50 ஆண்டுகளாகவே கோயில் சொத்துக்களும், உடமைகளும் ஆட்சியாளர்களால் சுருட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் உலவுகின்றன. இவற்றை பொய் என்று நிரூபிப்பதற்கு பதிலாக, இவை அனைத்தும் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்படும் வகையில் தான் ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் உள்ளன. இது நல்லதல்ல.

எனவே சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தேவையான அதிகாரம் மற்றும் வசதிகளை அரசு வழங்க வேண்டும். சிலைக் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்களை கைது செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
Tags:    

Similar News