செய்திகள்

பண்ருட்டி அருகே திருமண வீட்டில் ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளை

Published On 2018-06-26 18:19 GMT   |   Update On 2018-06-26 18:19 GMT
பண்ருட்டி அருகே திருமண வீட்டில் ரூ.2 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுப்பேட்டை:

பண்ருட்டி அருகே திருமண வீட்டில் ரூ.2 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

புதுப்பேட்டை அருகே மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 58). கொத்தனார். இவருடைய மகன் தாமோதரன். இவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் தாமோதரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இவர்களது திருமணம் நேற்று முன்தினம் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் நடைபெற்றது. பின்னர் மாலை பண்ருட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி கண்ணன் தனது வீட்டை நேற்று முன்தினம் அதிகாலை பூட்டிவிட்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் திருமண நிகழ்ச்சியில் மும்முரமாக இருந்தார். இந்த நிலையில் திருமண வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நைசாக உள்ளே புகுந்தனர். பின்னர், அவர்கள் வீட்டில் இருந்த 5½ பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த நிலையில் இரவு 10.30 மணிக்கு மேல் கண்ணன் தனது குடும்பத்தினர் மற்றும் புதுமண தம்பதியை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதில் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது நகை-பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

திருமண வீட்டில் நகை-பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிவேல், செல்வம் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News