செய்திகள்

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

Published On 2018-06-25 18:31 IST   |   Update On 2018-06-25 18:31:00 IST
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்:

சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு மர்ம போன் ஒன்று வந்தது. போனில் பேசிய வாலிபர், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக விழுப்புரம் தனிப்பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விழுப்புரம் புதிய பஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல்டிடெக்டர் கருவியுடன் வந்ததை பார்த்த பயணிகள் பஸ் நிலையத்தில் ஏதோ வெடி குண்டு வெடிக்கப் போகிறதோ என்று நினைத்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடி குண்டு ஏதும் வைக்கப்பட்டுள்ளதா? என்று பஸ் நிலையத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 1 மணி நேரம் பஸ் நிலையம் முழுவதும் சோதனை செய்த பின்னர் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்க வில்லை.

விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது வெறும்புரளி என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட போன் எங்கிருந்து வந்தது? என்பதை பார்த்த போது அது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு பகுதியில் இருந்து பேசியது தெரியவந்தது.

இது குறித்து மரக்காணம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் கூனிமேடு சென்று விசாரணை நடத்தியபோது அதே பகுதியை சேர்ந்த புவனேஷ் (வயது 17) என்பவர் போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

மேலும் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டுக்கும், தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் புவனேசை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News