செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அனைத்து வழக்குகளும் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்

Published On 2018-06-25 16:07 IST   |   Update On 2018-06-25 16:07:00 IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுரை கிளையில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. #ThoothukudiShooting
சென்னை:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோருவது, ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக என பல வழக்குகள் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு இடைக்கால உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளன.



இந்நிலையில், அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அனைத்து வழக்குகளையும் சென்னைக்கு மாற்ற உத்தரவிட்டார்.

மேலும், துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஜூலை 2-ம் தேதி பிற்பகலில் பட்டியலிட வேண்டும் என ஐகோர்ட் பதிவாளருக்கும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News