செய்திகள்

போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க காரில் சென்று, வீடுகளில் திருடிய 2 பேர் கைது

Published On 2018-06-25 03:58 GMT   |   Update On 2018-06-25 03:58 GMT
போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க இரவு நேரங்களில் காரில் சென்று வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி:

மதுரவாயல் பகுதியில் அடிக்கடி வீடுகளின் பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதையடுத்து மதுரவாயல் உதவி கமிஷனர் ஜான்சுந்தர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வானகரம் அருகே மதுரவாயல்-தாம்பரம் பைபாஸ் சாலை சர்வீஸ் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த காரில் 2 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது, முன்னுக்குப்பின் முரணாக பேசினர். மேலும் அவர்கள் வந்த காருக்குள் விலை உயர்ந்த டி.வி. ஒன்றும் இருந்தது. அதுபற்றி போலீசார் கேட்டபோது, ஒரு வீட்டின் பூட்டை உடைத்து திருடி வந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவா என்ற முனியப்பன் (வயது 28), கார்த்திக் என்ற அப்துல் அமீது(34) என்பது தெரிந்தது.

மேலும் விசாரணையில், இவர்கள் இருவரும் இரவு நேரங்களில் மதுரவாயல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க காரில் சென்று வீடுகளின் பூட்டை உடைத்து திருடி வந்ததை ஒப்புக்கொண்டனர்.

அவர்களிடம் இருந்து சுமார் 13 பவுன் நகைகள், 2 எல்.ஈ.டி. டி.வி. மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் சிறையில் அடைத்தனர். #tamilnews
Tags:    

Similar News