செய்திகள்

வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி அளித்த பாரதிராஜா மீது புதிய வழக்கு

Published On 2018-06-22 23:24 GMT   |   Update On 2018-06-22 23:24 GMT
வன்முறையை தூண்டும் விதமாக பேட்டியளித்த இயக்குநர் பாரதிராஜா மீது திருவல்லிக்கேணி போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். #Bharathiraja
சென்னை:

சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் நாராயணன். இவர் இந்து மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளர் ஆவார். இவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:

இயக்குனர் அமீருக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த இயக்குனர் பாரதிராஜா தமிழக அரசை மிரட்டும் விதமாகவும், தேசத்துக்கு விரோதமாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாவோயிஸ்டு மற்றும் நக்சலைட்டு இயக்கம் எதுவும் இல்லை என்றும், அப்படியொரு சூழலை ஏற்படுத்தி விடாதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வடபழனி போலீஸ் நிலையத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

எனவே, மீண்டும் வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி கொடுத்துள்ளதால் பாரதிராஜா மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், இயக்குநர் பாரதிராஜா மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், மக்களையும் அரசையும் அச்சுறுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் நேற்று இரவு வழக்குப் பதிவுசெய்தனர்.
Tags:    

Similar News