செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட மோடிக்கு அழைப்பு - பொன் ராதாகிருஷ்ணன் தகவல்

Published On 2018-06-20 10:25 GMT   |   Update On 2018-06-20 10:25 GMT
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடியை அழைக்க உள்ளதாக மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #AIIMS #AIIMSInMadurai
மதுரை:

மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. தோப்பூரில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை இடம் தெரிவு செய்யப்பட்டதற்கான மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கடிதத்தை, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரிடம் இன்று காண்பித்து வாழ்த்து பெற்றார்.  

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 750 படுக்கைகளை கொண்ட இந்த எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட இருப்பதாகவும், 100 எம்.பி.பி.எஸ். இடங்கள், 60 செவிலியர் படிப்புக்கான இடங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்ற முயற்சி வெற்றி பெற்றுள்ளது என்றும், இந்த மருத்துவமனையால் 13 மாவட்ட மக்கள் பயன் பெறுவார்கள் என்றும் மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.



எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்றும், அடிக்கல்  நாட்டு விழாவுக்கு பிரதமரை அழைக்க உள்ளதாகவும்  பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதற்கிடையே தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் வீரராகவ ராவ்  மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் உடன் சென்று ஆய்வு செய்தனர்.

பின்னர் நிருபர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த எய்ம்ஸ் மருத்துவமனை அரசின் முயற்சியால் மதுரையில் அமைய உள்ளதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடம் முழுவதும் அரசுக்கு சொந்தமான இடம் என்றும் கூறினார். எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்துக்கு அருகிலேயே தேசிய நெடுஞ்சாலை, விமான நிலையம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். #AIIMS #AIIMSInMadurai
Tags:    

Similar News