செய்திகள்

அமில கசிவை சரிசெய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

Published On 2018-06-20 06:02 GMT   |   Update On 2018-06-20 06:02 GMT
அமில கசிவை சரிசெய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்க உத்தரவிட கோரி பொது மேலாளர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். #Sterlite
மதுரை:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு கடந்த 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி ‘சீல்’ வைத்தது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்க கோரி அதன் பொது மேலாளர் சத்தியபிரியா மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது. கடந்த 16-ந்தேதி கந்தக அமிலம் குழாயில் கசிவு ஏற்பட்டது. அப்போது இரவு நேரம் என்பதாலும், மின் இணைப்பு இல்லாததாலும் உரிய நேரத்துக்கு சென்று குழாயில் ஏற்பட்ட கசிவை தடுக்க முடியவில்லை.

இதேபோல எல்.பி.ஜி. கியாஸ் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் ஏராளமாக உள்ளன. இவை தொடர்ந்து பராமரிக்கப்படாமல் இருந்தால் குழாய்களில் கசிவோ, வேறு ஏதேனும் ஆபத்துகள் உண்டாகவோ வாய்ப்புகள் உள்ளன. இதனால் தொழிற்சாலையை சுற்றி உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே ஸ்டெர்லைட் ஆலைக்குள் பராமரிப்பு பணிக்காக குறிப்பிட்ட பணியாளர்களை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்ப உத்தரவிட வேண்டும்.

பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தற்காலிகமாக மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #Sterlite
Tags:    

Similar News