செய்திகள்

அந்தியூர் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

Published On 2018-06-16 18:14 GMT   |   Update On 2018-06-16 18:14 GMT
அந்தியூர் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
அந்தியூர்:

ஈரோடு வனக்கோட்டத்துக்கு உள்பட்ட அந்தியூர் வனப்பகுதியில் முதல் முறையாக புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் வன ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கு பயிற்சி அளிக்கும் முகாம் அந்தியூர் வனத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அப்போது ‘அந்தியூர், சென்னம்பட்டி, பர்கூர் ஆகிய வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி 15-ந்தேதி (நேற்று) தொடங்கி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை என 3 நாட்கள் நடைபெறும்’ என்று அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. மாவட்ட வனத்துறை அதிகாரி விஸ்வநாதன் மற்றும் கூடுதல் வன அதிகாரி ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்னம்பட்டி, முரளி பகுதியில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பல்வேறு ஊன் உண்ணிகள் தாவர உண்ணிகள் என 2 வகையாக பிரிக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பேது தனது குட்டியுடன் சிறுத்தைபுலி அங்குள்ள ஒரு வனக்குட்டையில் தண்ணீர் குடிக்க சென்றதை நேரில் பார்த்து பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பதிவான புலியின் கால் தடங்களை சேகரித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘வரைபடங்கள் மற்றும் குறிப்புகள் பதிவு செய்தல் பற்றிய கையேடுகள் வைத்து புலி கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டோம். மொத்தம் 4 அளவுகளில் பதிவாகி இருந்த புலியின் கால்தடங்களை சேகரித் தோம். முதல் நாள் 4 புலிகளின் கால்தடங்கள் பதிவு செய்தோம். மேலும் வனப்பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலமும் வன விலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படும். புலிகள் இருப்பிடம் பற்றிய தகவல் ஜி.பி.ஆர்.எஸ் மூலம் கண்காணிக்கப்படும்’ என்று வனத்துறையினர் தெரிவித்தார்கள்.

இந்த கணக்கெடுக்கும் பணியில் அந்தியூர் வனச்சரகர் பாலகிருஷ்ணன். பர்கூர் வனச்சரகர் மணிகண்டன், சென்னம்பட்டி வனச்சரகர் செங்கோட்டையன் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனத்தினர் 100 பேர் ஈடுபட்டனர். 
Tags:    

Similar News