செய்திகள்

ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-06-12 08:26 IST   |   Update On 2018-06-12 08:26:00 IST
நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என்ற ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு தடை கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, செவிலியர்களின் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் குழுவை ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியம் வழங்க கோரி ஒப்பந்த செவிலியர்கள் தரப்பில் ஜெயப்பிரகாஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஒப்பந்த செவிலியர்களின் மாத ஊதியத்தை ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக 15 நாட்களுக்குள் அரசாணை பிறப்பிக்கப்படும்’ என்று தமிழக அரசுத்தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் புகழ்காந்தி, ஒப்பந்த செவிலியர்கள் ஊதிய உயர்வு கோரி வழக்குத் தொடரவில்லை. பணிநிரந்தரத்துடன் சம வேலைக்கு சம ஊதியம் என்பதே ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கை. எனவே இதுகுறித்து தமிழக அரசு பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என்று வாதாடினார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘ஒப்பந்த செவிலியர்கள் தங்களின் கோரிக்கை தொடர்பாக ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் குழுவிடம் முறையிட வேண்டும். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களும் தாங்கள் பணியில் சேர்ந்த நாள், பணிக்காலம் போன்ற விவரங்களை குழுவிடம் கொடுக்க வேண்டும். அவற்றை பரிசீலித்து ஒப்பந்த செவிலியர்களுக்கான சரியான ஊதியத்தை 6 மாதத்தில் நிர்ணயித்து அரசுக்கு, அதிகாரிகள் குழு பரிந்துரைக்க வேண்டும். அதன் அடிப்படையில் அரசு பரிசீலித்து உரிய முடிவு எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News