செய்திகள்

சென்னையில் அரசு ஊழியர்- ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

Published On 2018-06-11 10:30 IST   |   Update On 2018-06-11 11:00:00 IST
சம்பள உயர்வு மற்றும் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்யக் கோரி சென்னையில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். #teachersstrike

சென்னை:

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், போராட்டங்களை பல்வேறு கட்டங்களாக நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் 7-வது ஊதியக்குழு அறிவித்த பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கேட்டு வருகின்றனர்.

மேலும் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட போது ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய வித்தியாசத்தை சரி செய்ய வேண்டும், தொகுப்பு ஊதியத்தின் கீழ் சம்பளம் பெற்று வருவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை பிரதானமாக முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 


இது தொடர்பாக கடந்த ஆண்டு முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தைதோல்வியில் முடிந்தது. இதனால் அப்போது ஜாக்டோ-ஜியோ சார்பில் தொடர் வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது.

அதனால் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. பின்னர் ஊதிய முரண்பாடு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை அரசு வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. இதை அரசும் ஒப்புக் கொண்டது.

ஆனால் இதுவரை அந்த பரிந்துரையை அரசு வெளியிடவில்லை. ஆனால் அந்த குழுவின் காலம் நீட்டிக்கப்பட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி சித்திக் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 8-ந்தேதி சென்னையில் நடந்த ஜாக்டோ-ஜியோ மறியல் போராட்டத்தின் போது ஒரு நபர் கமிட்டியில்தான் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து கடந்த வாரம் தலைமை செயலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் நேரில் ஆஜராகி தங்கள் கருத்தை தெரிவித்தனர். அப்போது ஜூன் 11-ந்தேதி முதல் சென்னையில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என்று ஜாக்டோ- ஜியோ அறிவித்தது.

அதன்படி சென்னை எழிலகத்தில் இன்று ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் என 250 பேர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மேலும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். #teachersstrike

Tags:    

Similar News