செய்திகள்

மதுராந்தகத்தை சேர்ந்த அக்கா-தம்பி லாரி மோதி பலி

Published On 2018-06-09 03:05 GMT   |   Update On 2018-06-09 03:05 GMT
மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றபோது லாரி மோதியதில் மதுராந்தகத்தை சேர்ந்த அக்கா-தம்பி பலியாகினர்.
வத்தலக்குண்டு:

சென்னையை அடுத்த மதுராந்தகத்தை சேர்ந்த லோகநாதன் என்பவருடைய மகன் பிரதாப் (வயது 21). இவர், அங்குள்ள ஒரு ஜூஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். அவருடைய சித்தப்பா மகன் மெர்வின் (26), அவருடைய தங்கை கவுசல்யா (23). மெர்வினின் தோழி கயல்விழி (23). இவர்கள் 4 பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

அதன்படி 4 பேரும், 2 மோட்டார் சைக்கிளில் நேற்று காலை கொடைக்கானலுக்கு புறப்பட்டனர். ஒரு மோட்டார் சைக்கிளை பிரதாப் ஓட்ட, பின்னால் கவுசல்யா அமர்ந்திருந்தார். இதேபோல் மற்றொரு மோட்டார் சைக்கிளை மெர்வின் ஓட்ட தோழி கயல்விழி உடன் சென்றார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில், கன்னிமார் கோவில் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற லாரி, எதிர்பாராதவிதமாக பிரதாப் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட பிரதாப்பும், கவுசல்யாவும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். மெர்வின், கயல்விழி ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் மாரிமுத்துவை (40) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News