செய்திகள்
13 கிலோ எடைகொண்ட மனுக்களை தலையில் சுமந்தபடி தனது மகனுடன் வந்த மூதாட்டி குண்டுப்பிள்ளை.

13 கிலோ மனுக்களை தலையில் சுமந்தபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த மூதாட்டி

Published On 2018-06-05 04:25 GMT   |   Update On 2018-06-05 04:25 GMT
அபகரிக்கப்பட்ட தனது நிலத்தை மீட்டுத் தரக்கோரி 13 கிலோ மனுக்களை தலையில் சுமந்தபடி மூதாட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர்:

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில்நேற்று குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆண்களும், பெண்களும் கையில் மனுக்களுடன் வந்திருந்தனர்.

அப்போது விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுகா கூத்துக்குடி புதுக்காலனியை சேர்ந்த மூதாட்டி குண்டுப்பிள்ளை(வயது 62) என்பவர், தனது மகன் குமாரவேலுவுடன் 13 கிலோ எடை கொண்ட கோரிக்கை மனுக்களை தலையில் சுமந்தபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

பின்னர் அவர்கள் மனு நகல்களின் மூட்டையையும், புதிதாக கொடுக்க இருந்த மனுவையும் கலெக்டர் தண்டபாணியிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவரிடம் விசாரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா, ஐவதுகுடி கிராமத்தில் எனக்கு சொந்தமான 2 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்து விட்டனர். இதை மீட்டு தரக்கோரி 11 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள், அமைச்சர்கள் என இதுவரை நான் கொடுத்த மனுக்களின் மொத்த எடை 13 கிலோ ஆகும்.

இதோ அந்த மனுக்களின் நகல்கள். நல்லது நடக்க வேண்டும் என்றால் தீக்குளிக்கத்தான் செய்யணும். 11 ஆண்டுகளுக்கு முன்பு நான் குண்டாக இருந்தேன். மனுகொடுக்க அலைந்து மெலிந்து விட்டேன் என்றார்.

உடனே கலெக்டர் தண்டபாணி, தீக்குளித்து விடாதீர்கள், மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்றார். பின்னர் அந்த மூதாட்டி மகனுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
Tags:    

Similar News