செய்திகள்

கடலூர் பகுதியில் சூறைக்காற்று: 40 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன

Published On 2018-06-04 10:50 GMT   |   Update On 2018-06-04 10:50 GMT
கடலூர் பகுதியில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் 40 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம் அடைந்தன.

கடலூர்:

அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் ஓரிரு இடங்களில் திடீரென்று மழையும் பெய்து வந்தது.

நேற்று மதியம் 3 மணி அளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென்று இடி- மின்னலுடன் பலத்த சூறை காற்றும் வீசியது.

கடலூர் அருகே ஒதியடிகுப்பம், எஸ்.புதூர், எம்.புதூர் உள்ளிட்ட பல இடங்களில் ஏலக்கி, பூவன், நாடு போன்ற வாழை மரங்கள் 40 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்தன.

சூறைக்காற்றினால் அந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்தனர். இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:-

எஸ்.புதூர் பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகளை இரவு-பகலாக காத்து கிடந்து தண்ணீர் பாய்ச்சி வளர்த்து வந்தோம். அந்த வாழை மரங்களில் உள்ள வாழைத்தார்களை இன்னும் ஒரு மாதத்தில் அறுவடை செய்ய இருந்தோம். இந்த நிலையில் நேற்று வீசிய சூறைக்காற்றால் எங்களது பகுதியில் பல ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமாகி உள்ளது.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News