செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் பெய்த மழையால் சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கும் காட்சி

அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த மழையால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2018-06-04 13:50 IST   |   Update On 2018-06-04 13:50:00 IST
அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த கன மழையால் அப்பகுதியில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தன. மழை நீரால் சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை, நல்லாம்பாளையம், உஞ்சினி, சிறுகடம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழையால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.இதன் காரணமாக மின்சாரம் தடைப்பட்டதோடு, பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நேற்று மாலை 3 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு வரை தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் எங்கும் செல்லும் முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பெய்த மழை குளிர்ச் சியை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே செந்துறை பகுதியில் நீர்வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தன. இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. எனவே பருவ மழை காலத்திற்கு முன்பாக நீர்வரத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் மரங்கள் முறிந்து சாலையில் கிடப்பதை படத்தில் காணலாம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் போதிய அளவு மழை பெய்யாததால் அப்பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்ததால் ஆழ் குழாய் கிணறுகளிலும் தண்ணீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று காலை முதல் மாலை வரை கறம்பக்குடி பகுதியில் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் வயல் பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றன. இந்த மழை மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் கரூர் தாந்தோணி மலை, சுங்கவாயில், திருமாநிலையூர், லைட்ஹவுஸ் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் குளித்தலை பகுதியில் மழை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை லேசான தூரலுடன் மழை பெய்தது.#tamilnews
Tags:    

Similar News