செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் 4 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழப்பு

Published On 2018-06-04 08:15 GMT   |   Update On 2018-06-04 08:15 GMT
தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் அங்கு பணிபுரிந்த நான்காயிரம் ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர். இதனால், அவர்களது எதிர்காலம் கேள்வி குறியாகி உள்ளது. #Sterlite
தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு கடுமையாக இருந்ததையடுத்து ஆலையை மூடக்கோரி பலகட்ட போராட்டங்கள் நடந்தது. கடந்த 22-ந்தேதி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்பிறகு அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதிகாரிகள் அந்த ஆலைக்கு சீல்வைத்தனர்.

ஆலை மூடப்பட்டதால் அங்கு பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் வேலை இழந்துள்ளனர். ஸ்டெர்லைட்டில் 1100 நிரந்தர ஊழியர்களும், 3 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களும் பணியாற்றி வந்தனர்.

ஆலை மூடப்பட்டாலும் அவர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளம் இப்போது வழங்கப்பட்டு உள்ளது. அதாவது நிரந்தர ஊழியர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்கி இருக்கிறார்கள். ஒப்பந்த ஊழியர்களுக்கு பின்னர் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அடுத்த மாதம் முதல் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதனால் ஊழியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

இங்கு வேலை பார்த்த நிரந்தர ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கிடைத்து வந்தது. எனவே நிரந்தர ஊழியர்களில் 500லிருந்து 600 பேர் வரை தூத்துக்குடியிலேயே சொந்தமாக வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். ஊழயர்களில் பலருக்கு ஆலை நிர்வாகவே வீடு வழங்கியுள்ளது. பலர் வாடகை வீடுகளிலும் இருக்கிறார்கள்.


மீண்டும் ஆலை இயக்கப்படுமா? இல்லை நிரந்தரமாக மூடப்படுமா? என்பது இன்னும் சரியாக தெரியாததால் அவர்கள் குழப்பத்தில் சிக்கி தவிக்கிறார்கள். ஸ்டெர்லைட் போராட்டம் கலவரமாக மாறியபோது ஸ்டெர்லைட் ஊழியர்கள் பலர் தாக்கப்பட்டனர். அவர்களது குடியிருப்புகளும் தாக்கப்பட்டன.

இதனால் ஸ்டெர்லைட் ஊழியர்கள் தங்கள் வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊர் அல்லது உறவினர்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். தற்போது ஒன்றிரண்டு பேர் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு வந்த ஒரு ஊழியரை நேற்று பக்கத்து வீட்டினர் தாக்கி இருக்கிறார்கள். இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் பின்னர் பிரச்சினை வரக்கூடாது என்பதால் அவர் போலீசில் கூட புகார் செய்யவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு சிக்கல்கள் இருப்பதால் ஊரை விட்டு சென்ற ஊழியர்களும் திரும்பி வர பயப்படுகிறார்கள். இப்போது குழந்தைகளுக்கு பள்ளிகள் தொடங்கிவிட்டன. எனவே கட்டாயம் திரும்பிவர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆலை மூடப்பட்டதால் வேலை பறிபோகும் நிலை இருப்பதால் இனியும் தூத்துக்குடியில் வசிக்க முடியுமா? என்ற கேள்வியும் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பலர் ஆலை சம்பளத்தை நம்பி கடன் வாங்கி வீடு கட்டி இருக்கிறார்கள். கார் போன்ற வாகனங்கள் வாங்கி இருக்கிறார்கள். மேலும் பல்வேறு வி‌ஷயங்களுக்காகவும் கடன் வாங்கி இருக்கிறார்கள். அவர்களால் இனி இந்த கடனை அடைக்க முடியுமா? என்ற பயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இனி சம்பளம் வராவிட்டால் என்ன செய்வது, வேறு எந்த வேலையை தேடி செல்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். பள்ளிகள் திறந்து விட்டதால் தங்கள் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் இப்போது செலுத்த வேண்டும். அதற்கும் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். வேலை பறிபோனால் தொடர்ந்து குழந்தைகளை அதே பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்க முடியுமா? என்ற கவலையும் உள்ளது. பலர் இப்போதே வேறு வேலை கிடைக்குமா? என்று தேடத்தொடங்கி விட்டனர்.

இதுபற்றி ஒரு அதிகாரி கூறும்போது ஸ்டெர்லைட்டில் வேலை பார்த்த ஊழியர்கள் பெரும்பாலானோர் மாதம் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் பெற்றனர். புதிதாக வேலை தேடி சென்றால் ரூ.10 ஆயிரம் கூட கிடைப்பது கடினம். எனவே ஊழியர்களின் நிலைமை மோசமாக உள்ளது என்று கூறினார்.

கலவரத்தின் போது ஊழியர்கள் மற்றும் அவர்களது குடியிருப்புகள் தாக்கப்பட்டதால் குழந்தைகள் பலர் பீதியில் இருப்பதாகவும், பள்ளிக்கு செல்ல பயப்படுவதாகவும் ஊழியர் ஒருவர் கூறினார். #Sterlite
Tags:    

Similar News