செய்திகள்

மாநாட்டில் பங்கேற்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் டெல்லி பயணம்

Published On 2018-06-03 23:52 GMT   |   Update On 2018-06-03 23:52 GMT
2 நாட்கள் நடக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். #BanwarilalPurohit
சென்னை:

2 நாட்கள் நடக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். மாநாட்டை தொடர்ந்து அவர் பிரதமரை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

டெல்லியில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) கவர்னர் மற்றும் துணை நிலை கவர்னர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார்.

இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு, பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி, வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இந்த மாநாடு முடிந்த பின்பு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய மந்திரிகளை சந்தித்து பேச கவர்னர் பன்வாரிலால் புரோகித் திட்டமிட்டு இருக்கிறார்.

முன்னதாக நேற்று முன்தினம் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிடம், கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொலைபேசியில் பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லெட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை திரும்பி கொண்டிருந்தாலும், அங்கு பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது. அதேபோல சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். அங்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு இருக் கிறது.

இந்த 2 சம்பவங்கள் குறித்தும் அங்கு நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் விரிவாக ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது.   #BanwarilalPurohit

Tags:    

Similar News