செய்திகள்
பாகன் கஜேந்திரனின் மனைவி,மகன் ஆகியோரிடம் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி நிதிஉதவி வழங்கிய காட்சி.

யானை தாக்கி பலியான பாகன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் அரசு நிதியுதவி- அமைச்சர்கள் வழங்கினர்

Published On 2018-06-02 06:58 GMT   |   Update On 2018-06-02 06:58 GMT
சமயபுரம் கோவிலில் யானை தாக்கி பலியான பாகன் கஜேந்திரன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர்.
திருச்சி:

திருச்சி சமயபுரம் கோவிலில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காலையில் கோவில் வளாகத்தில் கட்டப்பட்டிருந்த யானை மசினி தாக்கியதில் பாகன் கஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

திடீர் ஆத்திரத்தில் ஏற்பட்ட இந்த நிகழ்வு உலகம் முழுவதும் உள்ள பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியது. யானை மசினி கோவிலை விட்டு வெளியே ஏற்றப்பட்டு அங்குள்ள கொட்டகையில் கட்டி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிந்ததும் இறந்த பாகன் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி இன்று பாகன் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு சமயபுரம் கோவில் அன்னதானம் சமுதாய கூடத்தில் நடந்தது. அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை பாகன் கஜேந்திரனின் மனைவி தேவிபாலா, மகன் அச்சுதன் ஆகியோரிடம் வழங்கினர்.

பின்னர் இதுகுறித்து கூறிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், யானை தாக்கி பாகன் கஜேந்திரன் இறந்த சம்பவம் அறிந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கவலையடைந்ததாகவும் குடும்ப தலைவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும் இறந்த கஜேந்திரன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் கூறினார். அதன்படி இன்று ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கஜேந்திரனின் குடும்ப வாரிசுக்கு வேலை கொடுப்பது பற்றி அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவில் யானை தொடர்பாக கோவில் நிர்வாகமும் வனத்துறையும் ஆலோசித்து தெரிவிக்கும் தகவலின் அடிப்படையில் காட்டில் விடுவதா? அல்லது கோவிலிலேயே வளர்ப்பதா? என்பது பற்றி அரசு முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
Tags:    

Similar News