செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்தவேண்டும்: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2018-06-01 21:45 GMT   |   Update On 2018-06-01 21:45 GMT
டி.என்.பி.எஸ்.சி. முதல்தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்தவேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். #TNPSC
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் முதல் தொகுதித் தேர்வுக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 30 வயதிலிருந்து 32 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 வயதிலிருந்து 37 வயதாகவும் உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இது ஓரளவு வரவேற்கத்தக்க நடவடிக்கை தான் என்றாலும் கூட போட்டித்தேர்வர்களுக்கு முழுமையான பயனை அளிக்காத நடவடிக்கையாகும். தமிழகத்தில் முதல் தொகுதி தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40-லிருந்து 35 ஆக குறைக்கப்பட்ட நிலையில் அதை 37 ஆக மட்டும் உயர்த்துவதால் எந்த பயனும் ஏற்படாது. எனவே முதல்தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்தவேண்டும்.

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்துக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரை சூட்டப்போவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரின் பெயரை கல்வி நிலையத்துக்கு சூட்டுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே மீன்வள பல்கலைக்கழகத்துக்கு இப்போதுள்ள பெயரே நீடிக்கும் என தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குரூப்-1 தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வயது வரம்பை உயர்த்தியிருப்பதாக முதல்-அமைச்சர் அறிவித்திருக்கிறார். இடஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு 35-ல் இருந்து 37 ஆகவும், இதர பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 30-லிருந்து 32 ஆகவும் வயது உச்சவரம்பினை உயர்த்தியுள்ள தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.  #TNPSC #tamilnews 
Tags:    

Similar News