செய்திகள்

வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக ஸ்டிரைக்- ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் மக்கள் ஏமாற்றம்

Published On 2018-05-31 06:00 GMT   |   Update On 2018-05-31 06:00 GMT
வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் பணம் பரிமாற்றம், காசோலை பரிவர்த்தனை முடங்கி உள்ளது. #BankWorkersStrike
சென்னை:

நாடுமுழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் 10,500 வங்கிகளை சேர்ந்த 45 ஆயிரம் பேர் இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்றனர். வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பணம் பரிமாற்றம், காசோலை பரிவர்த்தனை முடங்கி உள்ளது.

தினமும் 7 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலை பரிவர்த்தனை நடைபெறாமல் முடங்கியதால் தொழில் முனைவோர், வர்த்தக பிரமுகர்கள், சிறு நிறுவனங்கள், தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் 2-வது நாளாக நீடிப்பதால் சுமார் 14 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் தேங்கியுள்ளன.

வங்கிகள் மூலம் நடை பெறும் அனைத்து பண பரிமாற்ற சேவைகளும் 2 நாட்களாக இல்லாததால் தொழில் சார்ந்த நடவடிக் கைகள், அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

ஏ.டி.எம்.களில் நிரப்பி வைக்கப்பட்ட பணமும் நேற்றே தீர்ந்துவிட்டன. இதனால் இன்று பெரும் பாலான ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் மூடி கிடக்கின்றன. பணம் இருந்த ஒரு சில ஏ.டி.எம்.களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். சிறிய அளவிலான அன்றாட செலவுகளை மேற்கொள்வதற்கு தேவையான பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் தவித்தனர். சென்னையில் பஸ், ரெயில் நிலையங்கள், வணிக வளாகங்களில் உள்ள ஏ.டி.எம்.களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.



பெட்ரோல், டீசல், மளிகை செலவினங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு டெபிட்கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை அதிகமாக பயன்படுத்தினர்.

வங்கிகள் மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பாரிமுனையில் உள்ள குறளகம் அருகில் ஒன்றுதிரண்டு இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அனைத்து வங்கிகள் கூட்டமைப்பின் பொது செயலாளர் எச்.வெங்கடா சலம் தலைமையில் நடந்த போராட்டத்தில் கோரிக்கை முழக்க கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.#BankWorkersStrike
Tags:    

Similar News