செய்திகள்

நீங்கள்தான் முதல்வராக வர‌வேண்டும்- அரசு மருத்துவமனையில் ரஜினியிடம் உருகிய மக்கள்

Published On 2018-05-30 13:12 IST   |   Update On 2018-05-30 14:51:00 IST
எங்களின் துயரங்களை போக்க நீங்கள்தான் முதல்வராக வரவேண்டும் என்று துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தவர்கள் ரஜினியிடம் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள். #Thoothukudifiring #Rajinikanth
தூத்துக்குடி:

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் காயமடைந்தவர்களை ரஜினிகாந்த் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்காக சரியாக 11.30 மணிக்கு ரஜினிகாந்த் அரசு மருத்துவமனைக்கு வந்தார். ரஜினிகாந்துடன் 2 கார்கள் மட்டுமே மருத்துவமனைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காரில் இருந்து இறங்கிய ரஜினிகாந்த் அங்கு திரண்டு நின்ற ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.

பின்னர் நிர்வாகிகள் சிலருடன் ஆஸ்பத்திரிக்குள் சென்றார். அங்கு நின்ற நோயாளிகள் ரஜினியை கண்டதும் கைகூப்பி வணங்கினார்கள். வராண்டாவில் நின்ற ஒரு நோயாளியை அவர் காட்டியணைத்து ஆறுதல் கூறினார். பின்பு அவர் மருத்துவமனையில் குண்டுகாயம் அடைந்த‌வர்களை நேரில் சந்தித்தார். அங்கு சிகிச்சை பெறும் 47 பேரையும் அவர் தனித்தனியாக சந்தித்தார்.


குண்டு பாய்ந்து காயம்பட்டு அவதிப்படுபவர்களை பார்த்து அவர் கண்கலங்கினார். அப்போது அவரிடம் காயமடைந்தவர்கள் கண்ணீருடன் கூறுகையில், "நியாயமான கோரிக்கைக்காக அமைதியான வழியில் போராடிய எங்களை அநியாயமாக சுட்டுவிட்டார்கள். எங்கள் இந்த துயர நிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள். இதை போக்க நீங்கள்தான் முதல்வராக வரவேண்டும்" என நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

துப்பாக்கி சூட்டில் வலதுகாலை இழந்த மில்லர்புரம் வாலிபர் பிரின்ஸ்டனை பார்த்த ரஜினிகாந்த் கண்கலங்கினார். அங்கு நின்ற சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்களையும் சந்தித்து ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். பின்னர் மருத்துவமனையைவிட்டு வெளியில் வந்த ரஜினிகாந்த் அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டார். #Thoothukudifiring #Rajinikanth
Tags:    

Similar News