செய்திகள்

அக்னி நட்சத்திரம் நிறைவு - 100 டிகிரி வெயிலை தொடாமல் தப்பியது சென்னை

Published On 2018-05-29 00:33 GMT   |   Update On 2018-05-29 00:33 GMT
கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திர வெயில் நேற்றுடன் நிறைவடைந்தது. தலைநகர் சென்னை 100 டிகிரியை தொடாமல் தப்பியது. #AgniNatchathiram
சென்னை:

வெயில் உக்கிரமாக இருக்கும் அக்னி நட்சத்திரம் கடந்த 4–ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் அக்னி நட்சத்திர காலம்  நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்தக் காலகட்டத்தில் கோடை வெயில் வறுத்து எடுப்பது வழக்கம். கடந்த ஆண்டு தமிழகத்தில் இந்த காலத்தில் வெயில் அதிகமாக இருந்தது.

ஆனால் வழக்கத்துக்கு மாறாக, இந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது. திருத்தணி, வேலூர், மதுரை, திருச்சி, கரூர் போன்ற இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை வழக்கமாக அக்னி நட்சத்திர காலத்தில் 104, 105 டிகிரி என வெளியில் கொளுத்தும். இந்த ஆண்டு 100 டிகிரியை எட்டாமலேயே சென்னை நகரம் தப்பியது.

அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 9–ம் தேதி 98.6 டிகிரி வெயில் பதிவானது. சென்னை புறநகரான மீனம்பாக்கத்தில் ஒரு சில நாட்களில் 100 டிகிரியை எட்டியது.

தமிழகத்தில் இந்த பருவத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 108.6 டிகிரி வெயில் சுட்டெரித்தது. அக்னி நட்சத்திர இறுதி நாளான நேற்று திருத்தணியில் 105 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 97.16 டிகிரியும் வெயில் பதிவானது. #AgniNatchathiram
Tags:    

Similar News