செய்திகள்

தஞ்சையில் இன்று காலி குடங்களுடன் பெண்கள் திடீர் மறியல்

Published On 2018-05-28 09:52 GMT   |   Update On 2018-05-28 09:52 GMT
தஞ்சையில் குடிநீர் வழங்ககோரி காலி குடங்களுடன் பெண்கள் திடீரென மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்:

டெல்டாவில் சமிபகாலமாக குடிநீர் பிரச்சினை தலை விரித்தாடுகிறது. ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தஞ்சை கரந்தை பகுதியில் உள்ள பூக்கொல்லை, இரட்டை பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வரவில்லை. இந்த பகுதிக்கு குடி தண்ணீர் வராததை கண்டித்து இப்பகுதி மக்கள் கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இருந்த போதிலும் இந்த பகுதிக்கு தண்ணீர் வரவில்லை.

இந்த நிலை தொடர்ந்து நீடித்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை தஞ்சை - கும்பகோணம் செல்லும் சாலையில் கரந்தை பகுதியில் திடீரென காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள், சிறுவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் அதை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். தொடர்ந்து வல்லம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், மற்றும் ஆர்.டி.ஓ. சுரேஷ் ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இன்று மாலைக்குள் உங்கள் பகுதிக்கு தண்ணீர் விடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.அதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சில வாகனங்கள் வேறு பாதையில் மாற்றி விடப்பட்டது.

Tags:    

Similar News