செய்திகள்

லோடு ஆட்டோவில் கடத்தி வந்த 850 கிலோ குட்கா பறிமுதல்- வட மாநில வாலிபர்கள் 2 பேரிடம் விசாரணை

Published On 2018-05-25 11:14 GMT   |   Update On 2018-05-25 11:14 GMT
கோவையில் லோடு ஆட்டோவில் கடத்தி வந்த 850 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 வட மாநில வாலிபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை பெரியகடை வீதி போலீசார் நேற்று இரவு ராஜவீதி தேர்முட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பண்டல், பண்டல்களாக இருந்ததை கண்டுபிடித்தனர்.

ஆட்டோவில் இருந்த வடமாநில வாலிபர்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு உதவி கமி‌ஷனர் வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், ஜோதி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். லோடு ஆட்டோவில் 28 பண்டல்களில் மொத்தம் 850 கிலோ குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர் அங்கு சென்று குட்கா பண்டல்களை ஆய்வு செய்தனர். பின்னர் அவற்றை கைப்பற்றி ரேஸ்கோர்சில் உள்ள அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கண்ணம்பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டவிரோதமாக இயங்கி வந்த குட்கா ஆலையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்து ரூ.80 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலையை பறிமுதல் செய்தனர். இந்த ஆலையில் இருந்து தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு குட்கா அனுப்பி வைக்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இந்தநிலையில் கோவை மாநகருக்குள் விற்பனைக்காக கடத்தி வந்த குட்காவை போலீசார் பறிமுதல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த குட்கா பண்டல்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? யாருக்காக கொண்டு வரப்பட்டது? என விசாரித்த போது, ஆட்டோவில் இருந்த 2 வாலிபர்களும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

வெளிமாநிலத்தில் இருந்து வாகனங்கள் மூலம் இந்த குட்கா பண்டல்கள் கடத்தி வரப்பட்டதா? அல்லது கோவை மாவட்டத்திலேயே மேலும் குட்கா ஆலைகள் இயங்கி வருகிறதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.#tamilnews
Tags:    

Similar News