செய்திகள்

வடமதுரை அருகே கோவிலில் புகுந்த கொள்ளை கும்பல்

Published On 2018-05-25 10:15 GMT   |   Update On 2018-05-25 10:15 GMT
வடமதுரை அருகே கோவில் மணிகளை திருடிச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

வடமதுரை:

வடமதுரை அருகே மணியக்காரன்பட்டி - அப்பிநாயக்கன்பட்டி சாலையில் கருப்பணசாமி கோவில் உள்ளது. மரத்தின் அடியில் உள்ள இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். சுற்றுச் சுவர் இல்லாமல் திறந்த வெளியில் கோவில் உள்ளது.

இங்கு வேண்டுதல் நிறைவேறினால் பக்தர்கள் நேர்த்திக்கடனாக மணிகளை மரங்களில் கட்டித் தொங்க விடுகின்றனர். சம்பவத்தன்று பூஜைகள் முடிந்து அனைவரும் சென்று விட்டனர். பின்னர் நள்ளிரவு சமயத்தில் இங்கு வந்த மர்ம கும்பல் கோவிலில் இருந்த மணிகளை திருடிச சென்றனர்.

மறுநாள் காலை பூசாரி வந்து பார்த்தபோது கோவிலில் உள்ள மணிகள் கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வடமதுரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் கொள்ளை கும்பல் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வியாழக்கிழமை தோறும் அய்யலூரில் ஆட்டுச் சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் மோட்டார் சைக்கிளில் வருகின்றனர். இவர்களை நோட்டமிடும் கொள்ளை கும்பல் திருட்டுச் சாவி போட்டு பைக்குகளை திருடிச் சென்று விடுகின்றனர்.

பெரும்பாலான வியாபாரிகள், விவசாயிகள் போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதற்காக நமது தலைவிதி என்று நினைத்து புகார் அளிக்காமலேயே சென்று விடுகின்றனர். இதனால் கொள்ளை கும்பல் தொடர் அட்டகாசத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் தனியாக செல்லும் பெண்கள், ஆட்கள் இல்லாத வீடுகளை குறி வைத்து கொள்ளை கும்பல் செயல்பட்டு வருகிறது. எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இவர்களை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News