செய்திகள்

3 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு

Published On 2018-05-24 11:11 IST   |   Update On 2018-05-24 11:11:00 IST
தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மனு பிற்பகலில் அவசரமாக விசாரிக்கப்பட உள்ளது. #SterliteProtest #InternetBlocked
சென்னை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த தடியடி கண்ணீர் புகை குண்டு போன்ற வழிகளில் போலீசார் முயற்சித்தனர். இறுதியாக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு குறித்து மத்திய அரசும் உள்துறை அமைச்சகமும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், போராட்டம் மீண்டும் தொடர்வதை தவிர்க்க, தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணைய சேவையை முடக்கி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து, இன்று வழக்கறிஞர் சூரியபிரகாஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில் காயம் பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வேண்டும், துப்பாக்கிச்சூட்டின் போது பொதுமக்களை சுட்டவர்களை அடையாளம் காட்ட மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.

இந்த வழக்கு இன்று பிற்பகல் அவசர வழக்காக நீதிபதி பவானி சுப்புராயன் தலைமையில் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.#SterliteProtest #InternetBlocked
Tags:    

Similar News