செய்திகள்

எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வராத ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் - மீண்டும் புகைச்சலா?

Published On 2018-05-20 16:02 IST   |   Update On 2018-05-20 16:02:00 IST
சமீபத்தில் நடந்து முடிந்துள்ள 7 அரசு விழாக்களில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு செல்லாத நிலையில், இரு அணிகளுக்கு இடையே மீண்டும் புகைச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #ADMK #EPS #OPS
பெரியகுளம்:

ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் துணை முதல்வராக தற்போது இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா குடும்பத்தினருக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து தனி அணியாக செயல்பட்டு சசிகலா குடும்பத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்தார்.

கடந்த சில நாட்களாக அரசு விழாக்களில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எந்தவித அழைப்பும் விடுக்கப்பட வில்லை என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். கொடைக்கானல் மலர் கண்காட்சியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் என்று புறக்கணித்தார்.

கொடைக்கானலில் மலர் கண்காட்சி நடந்தால் ஓ.பன்னீர்செல்வம் தவறாமல் பங்கேற்று விடுவார். ஆனால் இந்த ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் கொடைக்கானல் விழாவில் பங்கேற்கவில்லை. அவர் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிலேயே இருந்தார். அப்போது தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்று காலைதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கார் மூலம் மதுரை வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார். அப்போது எடப்பாடி அணியினர் வத்தலக்குண்டு அருகே உள்ள காட்ரோட்டில் அவரை வழியனுப்பி வைக்க திரண்டு இருந்தனர். ஆனால், ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் யாரும் வரவில்லை.

இது குறித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூறுகையில் இதுவரை 7 அரசு விழாக்கள் நடந்து முடிந்துள்ளது. ஆனால், துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அந்த விழாக்களுக்கு அவரும் செல்லவில்லை என்றனர்.
Tags:    

Similar News