செய்திகள்

ஈரோடு மாநகராட்சி ஊழியர் தற்கொலை: மனைவியிடம் விசாரணை

Published On 2018-05-19 16:28 IST   |   Update On 2018-05-19 16:28:00 IST
ஈரோடு மாநகராட்சி ஊழியர் தற்கொலை செய்தது தொடர்பாக அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அந்தியூர்:

ஈரோடு அருகே உள்ள சேனாதிபதிபாளையத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 33). இவர் ஈரோடு மாநகராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அந்தியூர் அருகே உள்ள கரட்டூரை சேர்ந்த ராஜசேகரன் என்பவருடைய மகள் தமிழரசிக்கும் (30) கடந்த 6 ஆண்டுகளுக்கும் முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு நந்திதா (5), கிருத்திகா (2½) ஆகிய 2 மகள்கள் உள்ளார்கள். இதில் நந்திதா ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறார்.

கோடை விடுமுறையையொட்டி கடந்த 20 நாட்களுக்கு முன்பு கரட்டூரில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு குடும்பத்துடன் மோகனசுந்தரம் சென்றார். பின்னர் அங்கிருந்தபடியே ஈரோட்டுக்கு வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை தமிழரசி தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றுவிட்டார். மோகனசுந்தரம் மட்டும் வீட்டில் இருந்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு தமிழரசி குழந்தையுடன் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டில் உள்ள மின்விசிறியில் கயிறால் தூக்குப்போட்டு மோகனசுந்தரம் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தமிழரசி சத்தம் போட்டு கதறி அழுதார்.

இதுபற்றி அறிந்ததும் ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோகனசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தூக்கில் தொங்கிய மோகனசுந்தரம் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. எனவே போலீசார் மோகன சுந்தரத்தின் மனைவியிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது குடும்ப தகராறு ஏதும் தங்களுக்குள் இல்லை என்று மோகனசுந்தரத்தின் மனைவி கூறியதாக தெரிகிறது. எனவே மோகனசுந்தரத்தின் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News