செய்திகள்

ஊட்டி கோடை விழா: மலர் கண்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

Published On 2018-05-18 11:14 IST   |   Update On 2018-05-18 11:14:00 IST
ஊட்டியில் 122-வது மலர் கண்காட்சி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது. மலர் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். #OotyFlowerShow #FlowerShow #TNCM #EdappadiPalanisamy
ஊட்டி:

ஊட்டியில் மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் கோடை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடை கால சீசனையொட்டி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியும், கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும், ஊட்டியில் ரோஜா கண்காட்சியும் நடைபெற்று உள்ளது.

முக்கிய நிகழ்ச்சியான 122-வது மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது.

மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ரூ.1,850 கோடி மதிப்பிலான குந்தா நீரேற்று புனல் மின் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

பின்னர் ரூ. 7.49 கோடி மதிப்பில் முடிவுற்ற 7 திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.10.85 கோடியில் 5 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 1,577 பயனாளிகளுக்கு ரூ. 11.25 கோடியில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, துரைக்கண்ணு, செல்லூர் ராஜூ, சரோஜா, வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, எரி சக்தி துறை முதன்மை செயலாளர் விக்ரம் கபூர், தோட்டக் கலை இயக்குனர் சுப்பையன்,சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் அமர் குஷ்வாஹா, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, எம்.பி.க்கள் கே.ஆர். அர்ஜூனன், கோபால கிருஷ்ணன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் இணையம் தலைவர் மில்லர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 10 இடங்களில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டு உள்ளது. மலர் மாடத்தில் பூக்களால் ஆன பூப்பந்தல் போடப்பட்டு உள்ளது.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் மலர் தொட்டிகளும், புதுப் பூங்காவில் 25 ஆயிரம் மலர் தொட்டிகள் என 40 ஆயிரம் மலர் தொட்டிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளது.

பெங்களூர், ஓசூரில் இருந்து கொண்டு வரப்பட்ட 1 லட்சம் காரனே‌ஷன் மலர்களால் மேட்டூர் அணை மாதிரி உருவம் அமைக்கப்பட்டு உள்ளது. 60 அடி அகலம், 20 அடி உயரத்தில் இவைஅமைக்கப்பட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

10 ஆயிரம் காரனே‌ஷன் மலர்களை கொண்டு செல்பி ஸ்பாட்டும், 3,500 ஆர்கிட் மற்றும் காரனே‌ஷன் மலர்களை கொண்டு பார்பி பொம்மை உருவம் அமைக்கப்பட்டு இருக்கிறது.


ஆலந்து நாட்டில் இருந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட துலிப் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உழவன் செயலி அமைக்கப்பட்டு உள்ளது.

பல்வேறு வகை பூக்களால் மலர் பந்தல் போடப்பட்டு இருந்தது. வனத்துறை, தோட்டக்கலைத்துறை, வெலிங்டன் ராணுவ கல்லூரி, ராஜ் பவன், செய்தி மக்கள் தொடர்பு துறை உள்ளிட்ட 15 துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது.

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி ஊட்டியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. வருகிற 22-ந் தேதி வரை 5 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

கண்காட்சியை பார்வையிட வருகை தரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. #OotyFlowerShow #FlowerShow #TNCM #EdappadiPalanisamy
Tags:    

Similar News