செய்திகள்

வேளாங்கண்ணியில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

Published On 2018-05-17 17:12 GMT   |   Update On 2018-05-17 17:12 GMT
பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி வேளாங்கண்ணியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கலைந்து சென்றனர்.
வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு 2016-2017-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. நாகைமாலி, தி.மு.க. மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் பூவைமுருகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கடந்த 2016-2017-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்காத மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியபோக்கை கண்டித்தும், காப்பீடு தொகை வழங்காத கொளப்பாடு கூட்டுறவு கடன் சங்கத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து தகவலறிந்த நாகை நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவன அலுவலர் தினேஷ், வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் வருகிற ஜூன் மாதம் 15-ந்தேதிக்குள் விடுப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். 

இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த முத்துபெருமாள், ஜீவானந்தம், வரதன் உள்பட விவசாயிகள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News