செய்திகள்

திண்டுக்கல் அருகே டாஸ்மாக் கடைக்குள் புகுந்து பணம்-பாட்டில்கள் கொள்ளை

Published On 2018-05-17 15:17 GMT   |   Update On 2018-05-17 15:17 GMT
திண்டுக்கல் அருகே நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து பணம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள ராஜக்காபட்டி, கல்லுப்பட்டி, குத்துக்கொம்பு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடை திறக்கப்படுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இருந்தபோதும் அவர்களை சமாதானம் செய்து அதிகாரிகள் அனுப்பியதோடு டாஸ்மாக் கடையையும் திறந்தனர். இந்த கடையில் விற்பனை மேலாளராக முருகன் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வியாபாரத்தை முடித்து விட்டு ஊழியர்கள் கடையை பூட்டி சென்று விட்டனர்.

கடைக்கு வாட்ச்மேனாக முருகன் என்பவர் இருந்தார். நள்ளிரவில் சரக்கு வேனில் வந்த ஒரு கும்பல் வாட்ச்மேன் முருகனை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் கடையின் முன்புற கேட்டையும், உள்ளே இருந்த 2 பூட்டுகளையும் உடைத்தனர்.

பின்னர் கடைக்குள் புகுந்து பணம் ரூ.1½ லட்சம், 25 மதுபான பெட்டிகள் ஆகியவற்றை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்று விட்டனர். டாஸ்மாக் கடை அருகே எந்த வீடுகளும் இல்லாததால் படுகாயமடைந்த முருகன் அருகில் இருந்த தோட்டத்துக்கு சென்று இடத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பின் பொதுமக்களும் அங்கு ஒன்று கூடினர். இது குறித்து சாணார்பட்டி போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற டி.எஸ்.பி. கோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராம நாராயணன், சப்-இன் ஸ்பெக்டர் அபுதல்ஹா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த வாட்ச்மேன் முருகன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பில்லமாநாயக்கன் பட்டியைச் சேர்ந்த 4 பேர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News