செய்திகள்

கல்வி கட்டணம் கூடுதலாக வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-05-16 05:52 GMT   |   Update On 2018-05-16 05:52 GMT
கல்வி கட்டணம் கூடுதலாக வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #Ministersengottaiyan #Plus2Result
சென்னை:

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு குறித்து நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. இதில் 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 6754 மேல்நிலைப்பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 1907 ஆகும்.

மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற மாவட்டமாக விருதுநகர் உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் உள்ளன. மாற்றுத் திறனாளிகள் 2602 பேர் தேர்வு எழுதியதில் 2110 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு முதல் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலமும், இணைய தளம் மூலமும் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

கல்வித்துறையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிளஸ்-2 தேர்வில் தோல்வியை தழுவியவர்கள் துவண்டு விட தேவையில்லை. ஜூன் 25-ந்தேதியே அவர்கள் உடனடி தேர்வு எழுதலாம்.

பாடத் திட்டங்களை பொறுத்தவரை சில கேள்விகள் கஷ்டமாக இருப்பதாக மாணவர்கள் பேட்டி அளித்ததை தொலைக்காட்சி மூலம் அறிய முடிந்தது.

இந்த அரசின் பாடத் திட்டங்கள் ஒன்றுபோல்தான் உள்ளன. மாணவர்கள் பல்வேறு பொதுத் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுகளை சந்திக்க வேண்டி உள்ளதால் பரீட்சையில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டு இருந்தது. இதுவும் அடுத்த ஆண்டு மாணவர்களின் நலனுக்கேற்ப உருவாக் கப்படும்.

ரேங்க் முறை கடந்த ஆண்டு முதல் நீக்கப்பட்டதால் பெற்றோர்கள் இந்த அரசை பாராட்டியுள்ளனர்.

தனியார் பள்ளிகள் ஒவ்வொரு வகுப்பிற்கான கல்வி கட்டணத்தை பெயர் பலகையில் பட்டியலிட்டு வைக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்ச்சி விகிதத்தில் முதல் மாணவர், 2-ம் மாணவர் என்று பள்ளிகள் விளம்பர படுத்தக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம். இதையும் மீறி பள்ளிகள் விளம்பரப்படுத்தினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

வட மாவட்டங்களில் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக தேர்ச்சி விகிதம்குறைவதாக பலர் ஆதங்கப்படுகின்றனர். பல ஆசிரியர்கள் சொந்த ஊரான தென் மாவட்டங்களுக்கு மாறுதல் பெற்று சென்றதால் வட மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது.

இந்த குறையை போக்கும் வகையில் பகுதி நேர ஆசிரியர்களை இந்த அரசு நியமித்துள்ளது. எனவே எதிர்காலத்தில் இந்த குறை ஏற்படாது.

இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் சிறப்பாக உள்ளது.



அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை சதவிகிதம் குறைவாக உள்ளது உண்மைதான். அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் செப்டம்பர் இறுதி வரை சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மாணவர்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

ஏழை மாணவர்களை தனியார் பள்ளியில் படிக்க நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு உள்ளதால், இங்கு மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தி வருகிறோம்.

பொதுமக்களில் பலர் மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சேர்த்தால் ஆங்கில அறிவு நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் அங்கு செல்கின்றனர். அரசு இதை கவனமுடன் பரிசீலிக்கிறது. இதே தரத்தில் அரசு பள்ளிகளிலும் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஏழை மாணவர்களை கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். இவ்வாறு மாணவர்களை சேர்க்காத 12 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.#Ministersengottaiyan #Plus2Result
Tags:    

Similar News