செய்திகள்

வேப்பூர் அருகே லாரி மீது வேன் மோதி விபத்து: 2 பேர் பலி

Published On 2018-05-15 23:35 IST   |   Update On 2018-05-15 23:35:00 IST
வேப்பூர் அருகே லாரி மீது வேன் மோதி விபத்தில் 2 பேர் பலியான நிலையில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேப்பூர்:

பெரம்பலூரை சேர்ந்தவர் நல்லுசாமி (வயது 40). இவர் சொந்தமாக வேன் வைத்துள்ளார். நேற்று இரவு பெரம்பலூர் பஸ் நிலையம் அருகே வேனை நிறுத்தியிருந்தார்.

பஸ்நிலையத்தில் சென்னைக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. பஸ் கிடைக்காததால் அங்கு நின்ற சிலர் வேனில் ஏறி சென்னை செல்ல முடிவு செய்தனர். சுமார் 15-க்கும் மேற்பட்டோர் அந்த வேனில் ஏறினர். அவர்களை வேனில் ஏற்றிக்கொண்டு நல்லுசாமி சென்னை புறப்பட்டார்.

அந்த வேன் 1 மணியளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே குளப்பாக்கம் பஸ்நிறுத்தம் அருகே வந்துகொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று திடீரென்று சாலையை கடக்க முயன்றது. எதிர் பாராதவிதமாக வேன், மணல் ஏற்றி வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.

இதில் வேன் டிரைவர் நல்லுசாமி மற்றும் சென்னை ஆழ்வார் நகர் மீனாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரிட்டோ மனைவி தேன்மொழி(வயது 40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

மேலும் வேனில் இருந்த நிஜாமுதீன், விஜயா, முகமது இனியாஸ், ராஜேந்திரன், சாரதா, அனிதா, செல்வகுமாரி, ஜெனிதா உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம் பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News