செய்திகள்

சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ்

Published On 2018-05-15 00:20 GMT   |   Update On 2018-05-15 00:20 GMT
அவதூறு வழக்கில் தேடப்படும் எஸ்.வி.சேகரை கைது செய்யவில்லை என்றால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று சென்னை காவல் ஆணையருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #Shekher #PoliceCommisioner #Notice
சென்னை:

பா.ஜ.க. பிரமுகரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறாக கருத்து பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே, போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க எஸ்.வி.சேகர் 2 முறை சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர். ஆனாலும், போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருந்து வருகிறார். இதையடுத்து போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பத்திரிகையாளர் முரளிகிருஷ்ணன் சின்னத்துரை சார்பில் வக்கீல் டி.அருண், சென்னை காவல் ஆணையருக்கும், சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டருக்கும் கோர்ட்டு அவமதிப்பு நோட்டீசை நேற்று அனுப்பியுள்ளார்.

அதில்,  ஐகோர்ட்டு உத்தரவிட்டும் எஸ்.வி.சேகரை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 12-ம் தேதி சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சேகரை கைது செய்யாதது நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே எஸ்.வி.சேகரை கைது செய்து சட்டத்தின் முன் 7 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என குறிப்பிட்டுள்ளது. #Shekher #PoliceCommisioner #Notice
Tags:    

Similar News