செய்திகள்

குடிநீர் வசதி செய்து தரக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2018-05-14 17:09 GMT   |   Update On 2018-05-14 17:09 GMT
கோபி அருகே குடிநீர் வசதி செய்து தரக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோபி:

கோபி ஊராட்சி ஒன்றியம் அளுக்குழி ஊராட்சி கோபி பாளையம் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது.

இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதியடைந்தனர். இது குறித்து பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதன் காரணமாக அந்த பகுதி பெண்களும், ஆண்களும் இன்று கலை திடீர் போராட்டத்தில் குதித்தனர். ஈரோடு-சத்தியமங்கலம் ரோட்டில் கோபிபாளையம் பிரிவில் அவர்கள் திரண்டனர்.

பெண்கள் காலி குடங்களுடன் வந்திருந்தனர். திடீரென ரோட்டில் அமர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் வசதி கேட்டு அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

இந்த போராட்டத்தால் ஈரோடு-சத்தியமங்கலம் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் நிலவியது. முக்கியமான சாலை என்பதால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்றன.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

வருவாய்த்துறை அதிகாரிகளும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் அங்கு வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களும், பெண்களும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News