செய்திகள்

பரமத்திவேலூர் அருகே அரசு மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு - பொதுமக்கள் முற்றுகை

Published On 2018-05-14 11:24 GMT   |   Update On 2018-05-14 11:24 GMT
பரமத்திவேலூர் அருகே அரசு மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே மணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட குன்னிப்பாளையத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க பொதுப்பணிதுறை சார்பில் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அப்பகுதி பொதுமக்கள் 100-க்கு மேற்பட்டோர் காவிரி ஆற்றுப்பகுதியில் வந்து ஜே.சி.பி மற்றும் அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்களை தடுத்து நிறுத்தி இங்கு மணல் குவாரி அமைக்கக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடனே ஊழியர்கள் மாவட்ட பொதுப் பணித்துறை அதிகாரி பாலசுப்பிரமணியத்திற்கும் மற்றும் நாமக்கல் மாவட்ட உட்கோட்ட காவல்துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட கலெக்டர் உத்தரவில்தான் இங்கு மணல் குவாரி அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என உத்தரவு நகலை காண்பித்தார். அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் கூறுகையில் 10 ஊர்களுக்கு இங்கிருந்துதான் குடிநீர் செல்கிறது.

இங்கு மணல் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் வற்றிவிடும். நாங்கள் கடும் வறட்சியை சந்திக்க நேரிடும் விவசாயம் செய்யமுடியாமல் நாங்கள் ஊரை காலி செய்து விட்டுதான் போகவேண்டும் என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்திலும், முற்றுகையிலும், ஈடுபட்டனர்.

பின்னர் மாவட்ட கலெக்டர் பேசிவிட்டு, அதிகாரிகள் பேசுகையில் 3 நாட்கள் உங்களுக்கு அவகாசம் தருகிறோம். அதற்குள் நீதிமன்றத்திற்கு சென்று இங்கு மணல் குவாரி அமைக்காமல் இருக்கு உத்தரவு நகலை பெற்று வருமாறு கூறினார். அதுவரை இங்குவேலை நடைபெறாது என்று உறுதியளித்த பின்பு திங்கள் கிழமை அன்று நீங்கள் உத்தரவு நகல் வாங்கிவரவில்லை என்றால் அன்று முதல் மீண்டும் மணல் குவாரி அமைக்க எல்லா வேலைகளும் நடைபெறும்.

அதற்கு நீங்கள் எந்த இடையூறும் செய்யக்கூடாது என்று அதிகாரிகள் கூறினார். உடனே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் இங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News