செய்திகள்

சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்த நிலங்களை மீட்க வேண்டும் - ஸ்டாலின்

Published On 2018-05-14 13:06 IST   |   Update On 2018-05-14 13:06:00 IST
22 வருடங்களுக்கும் மேலாக ஆக்கிரமித்து வைத்திருந்த நிலத்தை சாஸ்திரா பல்கலைக்கழகத்திடம் இருந்து அரசு உடனடியாக மீட்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். #SastraUniversity
சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தஞ்சாவூரில் அமையவிருக்கும் திறந்தவெளி சிறைச்சாலையைத் தடுக்கும்விதமாக, அதற்கென ஒதுக்கப்பட்ட நிலத்தில் சுமார் 30 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டு, அதிலிருந்து வெளியேற மாட்டோம் என்று ஏறக்குறைய 22 வருடங்களுக்கும் மேலாகப் பிடிவாதம் காட்டி வரும் சாஸ்திரா பல்கலைக் கழகத்தின் சமூக விரோதப் போக்கு, ஒரு கல்வி நிலையத்திற்கு உகந்த அணுகுமுறையாக இல்லை.

திட்டத்திற்கான வரைவு அனுமதி இல்லாமல் கட்டிய கல்வி நிலையங்கள் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டிய கல்வி நிலையங்கள் புல்டோசர் வைத்து இடித்துத் தள்ளப்பட்டுள்ளன. ஆனால், சாஸ்திரா பல்கலைக் கழகத்தின் ஆக்கிரமிப்பை மட்டும், சந்தேகப்படும்படியான காரணங்களுக்காக கண்டுகொள்ளாமல் இருப்பதோடு, தலைமைச் செயலாளர் மட்டத்தில் இந்த நிலத்திற்கு மாற்று நிலத்தை பெற்றுக் கொண்டு, எப்படியாவது சாஸ்திரா பல்கலைக் கழகத்திற்கு உதவிட, இப்போதும் முயற்சிப்பது ஏன் என்றும் வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.


அரசு நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து கட்டிடம் கட்டிய பல்கலைக் கழகத்திற்கு மத்திய அரசு எப்படி அங்கீகாரம் அளித்தது? இப்போது அந்தப் பல்கலைக்கழகம் கொடுக்கும் மாற்று நிலங்களை ஏற்றுக்கொண்டு, ஆக்கிரமித்த நிலங்களை விட்டுவிடுங்கள் என்று நில நிர்வாகத்துறைக்கு தலைமைச் செயலாளரே அழுத்தம் கொடுப்பதாக வெளிவந்த செய்திகளின் பின்னணி என்ன?

ஆகவே, சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை உடனடியாகக் கைப்பற்றி, தஞ்சாவூரில் சிறைச்சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்படும் திறந்தவெளி சிறைச்சாலை விரைவில் அமைவதற்கு, அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமித்த நிலங்களை திருப்பிக் கொடுக்கும் எவ்வித நடவடிக்கைக்கும் அதிமுக அரசு உடன்படாமல், அரசுக்கு விரோதமாகச் செயல்படும் அதிகாரிகளை கண்காணித்து, அவர்கள் எவ்வளவு உயர்நிலையில் இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #SastraUniversity #MKStalin
Tags:    

Similar News