செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2018-05-13 00:18 IST   |   Update On 2018-05-13 00:18:00 IST
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை:

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில், இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 98 டிகிரி வெப்பநிலை காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர நிலவரப்படி மழை அளவு விவரம் வருமாறு:-

புதுக்கோட்டை, திருப்பத்தூர், தாராபுரம், கோவிலான்குளம், அருப்புக்கோட்டை, கோத்தகிரி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 3 சென்டி மீட்டர் மழையும், பெரியார், இரணியல், சிவகாசி, தாளவாடி, திருமயம், ராயக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 2 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

தளி, பாப்பிரெட்டிபட்டி, குளச்சல், சூலூர், பவானிசாகர், பீளமேடு, தக்கலை, சத்தியமங்கலம், குடவாசல், அரவக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. 
Tags:    

Similar News