செய்திகள்

அரசு வழங்கிய நிலத்தை அளந்து கொடுக்க நரிக்குறவர்கள் மனு

Published On 2018-05-10 16:02 GMT   |   Update On 2018-05-10 16:02 GMT
அரசு தங்களுக்கு வழங்கிய நிலத்தை முறையாக அளந்து கொடுக்க வேண்டும் என்று நரிக்குறவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
ராமநாதபுரம்:

திருவாடானை சமத்துவபுரம் நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்த ஏராளமான நரிக்குறவர்கள் தலைவர் செல்வம் தலைமையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் மேற்கண்ட பகுதியில் வசித்து வருகிறோம். எங்களில் 152 பேருக்கு கடந்த 2015-ம் ஆண்டு அரசால் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது.

இந்த நிலத்தை முறையாக அளந்து பிரித்து வழங்கவில்லை. இதுதொடர்பாக நாங்கள் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் எங்களுக்கு அரசு வழங்கிய நிலத்தை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உள்ளனர். இதுகுறித்து கேட்டபோது எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக எங்களுக்கு நிலத்தை அளந்து பிரித்து வழங்கி இருந்தால் நாங்கள் அந்த இடத்தில் குடிசை போட்டு வாழத்தொடங்கி இருப்போம்.

தற்போது அரசு வழங்கிய நிலத்தை எங்கள் கண் எதிரேயே ஆக்கிரமித்து அபகரிக்கும் செயல் நடந்து வருவது வேதனை அளிக்கிறது. எனவே, உடனடியாக அதிகாரிகள் எங்களுக்கு அரசு வழங்கிய நிலத்தை முறையாக பிரித்து அளந்து ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் வேறுவழியின்றி சாலை மறியல் மற்றும் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் நடவடிக்கையில் இறங்க திட்டமிட்டுஉள்ளோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடராஜன் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 
Tags:    

Similar News