செய்திகள்

கோவில் விழாவில் தகராறு - தொழிலாளி கொலையில் சகோதரர்கள் கைது

Published On 2018-05-10 04:25 GMT   |   Update On 2018-05-10 04:25 GMT
காரைக்குடி அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்குடி:

காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் சின்னையா (வயது 60). கூலித்தொழிலாளி. இவரது மகன் சுப்பையா (35).

நேற்று அந்தப்பகுதியில் பாட்டையா முனியசாமி கோவில் திருவிழா நடந்தது. திருவிழா ஊர்வலத்தின் போது இளைஞர்கள் சிலர் மது அருந்தி ஆட்டம் போட்டுச் சென்றனர். அவர்களை சுப்பையா கண்டித்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கு நின்ற மற்றவர்களும், இளைஞர்களை சத்தம் போட்டனர். இதனால் அந்த இளைஞர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

அதன் பிறகு இரவு 9 மணியளவில் 5 இளைஞர்கள் சுப்பையா வீட்டுக்கு வந்தனர். அவர்கள் கதவை தட்டியதும், சின்னையா கதவை திறந்தார்.

அவரிடம், ‘உனது மகனை வெளியே அனுப்பு, அவனை அடிக்காமல் விட மாட்டோம்’ என வாக்குவாதம் செய்தனர். ‘மகன் இங்கு இல்லை’ என சின்னையா கூறியபோதும் ‘வீட்டு முன்பு மோட்டார் சைக்கிள் நிற்கிறது. எனவே அவன் உள்ளே தான் இருப்பான், அவனை கொலை செய்வோம்’ என இளைஞர்கள் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த சின்னையா அவர்களிடம் வாக்குவாதம் செய்தார்.

அப்போது வீட்டு முன்பு கிடந்த இரும்பு பலகையை எடுத்து சின்னையாவை, இளைஞர்கள் தாக்கினர். இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் சின்னையாவை மீட்டு காரைக்குடி மற்றும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை சின்னையா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த நாச்சியப்பன் மகன்கள் ராஜா (19), ராஜேஷ் (18), ரவிச்சந்திரன் மகன் பாண்டியராஜன் (18), முத்து மகன் பாலசுப்பிரமணியன், மாரியப்பன் மகன் பழனிக்குமார் ஆகிய 5 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இதில் ராஜா, ராஜேஷ், பாண்டியராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News