துப்புரவு பணிக்கு புதிய டிராக்டர் வழங்க வேண்டும் - கலெக்டருக்கு பொது மக்கள் கோரிக்கை
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா தலைநகரமாகவும், சட்டமன்ற தொகுதியின் தலைமையிடமாகவும் விளங்குகிறது. கந்தர்வக்கோட்டையில் பல்வேறு அரசு அலுவலகங்களும் ஆண்கள்,பெண்கள் உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன. மேலும் கந்தர்வக்கோட்டை அருகில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கலைக் கல்லூரி,பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.
கந்தர்வக்கோட்டையில் சுமார் 10,000 க்கும் மேற்பட்டோர்கள் வசித்து வருகின்றனர். பல்வேறு பணிகள் நிமித்தமாக தினசரி 10,000 க்கும் மேற்பட்டவர்கள் கந்தர்வக்கோட்டைக்கு வந்து செல்கின்றனர். கந்தர்வக்கோட்டை ஊராட்சிக்கு மிகவும் குறைவான துப்புரவு பணியாளர்களே உள்ளனர். துப்புரவு பணிக்கு குறைவான சம்பளம் வழங்குவதால் புதிதாக ஆட்கள் வேலைக்கு வருவதில்லை.
குறைவான பணியாளர்களால் கடைவீதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ள நீண்ட நேரமாகிறது. 7 ஆண்டுகளுக்கு முன்புவாங்கிய குப்பை அள்ளும் டிராக்டர் வாகனம் அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது.
இதனால் கடைவீதிகளில் தூய்மை பணிகள் நடை பெறாமல் நகர் முழுவதும் குப்பை மேடுகளாக காட்சியளிக்கின்றன.எனவே கந்தர்வக்கோட்டைக்கு கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமிக்கவும், குப்பை அள்ளுவதற்க்கு புதிய டிராக்டர் வாகனம் வழங்கியும் சுகாதாரத்தை காக்கா மாவட்ட ஆட்சியருக்கு வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.