செய்திகள்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைகிறது

Published On 2018-05-03 12:26 GMT   |   Update On 2018-05-03 12:26 GMT
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும், நீர் வெளியேற்றம் அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
ஈரோடு;

ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கும், கீழ்பவானி வாய்க்காலுக்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் வறட்சி காரணமாகவும், எதிர்பார்த்த மழை பெய்யாததாலும் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் வரத்து குறைந்து வந்தது.

அவ்வபோது பெய்யும் மழையாலும், பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் பெய்யும் மழையாலும் அணைக்கு நீர்வரத்து உள்ளது.

தற்போது கீழ்பவானி பாசனத்துக்காக பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த 29-ந்தேதி இருந்து ஆயிரம் கனஅடி வீதம் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

ஆனால் நேற்று அணைக்கு 300 கனஅடி வீதம் தான் தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்று 54.52 அடியாக இருந்தது.

இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 54.05 அடியாக உள்ளது. அணைக்கு 216 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இன்று முதல் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. நீர்வரத்தை காட்டிலும், நீர் வெளியேற்றம் அதிகமாக உள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு தாளவாடி, பவானி, கவுந்தப்பாடி உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. தாளவாடி அருகே உள்ள தலமலை, கோடிபுரம், சூசைபுரம், தொட்டாபுரம், தொட்டகாஜனூர், ஒசூர், சிக்கள்ளி மற்றும் வனப்பகுதியில் சூறை காற்றுடன் இரவு 9.45 மணி முதல் 10.15 மணி வரை மழை பெய்தது.

பயங்கர இடியுடன் பெய்த இந்த மழையால் தொட்டகாஜனூர், சூசை புரம் பகுதியில் 15-க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் செல்போன் சார்ஜர்கள் பழுதாகின.
Tags:    

Similar News