செய்திகள்

அரியலூர் அருகே சொத்து தகராறில் இளம்பெண் படுகொலை

Published On 2018-04-28 19:26 IST   |   Update On 2018-04-28 19:26:00 IST
அரியலூர் அருகே சொத்து தகராறில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மாமனார்-மாமியார் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஆர்.எஸ்.மாத்தூர்:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடியை சேர்ந்தவர் கோவிந்தராசு (வயது 65). விவசாயி. இவரது மனைவி லோகாம்பாள். இந்த தம்பதிக்கு ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன், குமார் என்ற 3 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் கோவிந்த ராசுக்கு சொந்தமாக 6 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. அதனை தனது முதல் 2 மகன்களான ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரனுக்கு பிரித்து கொடுத்தார். குமாருக்கு நிலம் கொடுக்க வில்லை. இதனால் குமாரும் அவரது மனைவி அமராவதியும் கோவிந்தராசுவிடம் சென்று தட்டிக்கேட்டனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் வழக்கின் தீர்ப்பு குமாருக்கு சாதகமாக வருவது போல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராசு, லோகாம்பாள், ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன் மனைவி செல்வி ஆகிய 4 பேரும் நேற்றிரவு குமார் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த அமராவதியிடம் , ஏன் எங்களிடம் சொத்து கேட்டு தகராறு செய்கிறாய் என்று கூறி அவரை கட்டையால் தாக்கினர் . இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனிடையே குமார் அங்கு வரவே அவரையும் கத்தியால் குத்தினர். இதையடுத்து 4 பேரும் தப்பியோடிவிட்டனர். காயமடைந்த குமாரை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து செந்துறை போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய 4 பேரையும் தேடி வருகின்றனர். #tamilnews

Similar News