செய்திகள்

சூறாவளி காற்றில் மரம் முறிந்தது: தமிழகம்-கர்நாடகம் இடையே 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Published On 2018-04-21 09:48 GMT   |   Update On 2018-04-21 09:48 GMT
சத்தியமங்கலத்தில் நேற்று சூறாவளி காற்று வீசியதில் ராட்சத மரம் ஒன்று முறிந்து நடு ரோட்டில் விழுந்தது. இதனால் தமிழகம்-கர்நாடகா ஆகிய 2 மாநிலங்களுக்கு இடையே சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் லேசான மழை பெய்தது.

மழை அதிகமாக பெய்யாமல் சூறாவளி காற்று சுழட்டி...சுழட்டி வீசியதால் ஆயிரக்கணக்கான வாழைகள் வெட்டுண்ட மரங்கள் போல சாய்ந்து முறிந்தன.

சத்தி அடுத்த பெரியகுளம், நாடாகாலனி பகுதியில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான செவ்வாழை, தேன்வாழை, கதளி போன்ற வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தது.

அறுவடைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தண்ணீர் இல்லாத சூழ்நிலையிலும் கஷ்டப்பட்டு வளர்த்த வாழைகள் எல்லாம் நாசமாகி விட்டதே என விவசாயிகள் கண்ணீர் மல்க கூறினர்.

சேதமான வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த சூறாவளி காற்றில் சத்திய-மைசூர் ரோட்டில் பழமையான ராட்சத புங்கமரம் முறிந்து நடு ரோட்டில் விழுந்தது. இதனால் தமிழகம்-கர்நாடகா ஆகிய 2 மாநிலங்களுக்கு இடையே சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

உடனடியாக நெஞ்சாலை துறையினர் துரிதமாக செயல்பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் அந்த ராட்சத மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

சத்தி அருகே உள்ள பெரியகுளத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீடு, வெங்காய குடோன் பலத்த காற்றில் இடிந்து தரைமட்டமானது. #tamilnews
Tags:    

Similar News